ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்றோடு நிறைவு பெறவுள்ள நிலையில், இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆடவுள்ளது.
நியூசிலாந்தில் நடக்கவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாள்களில் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ள இந்திய அணியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் பேசுகையில், '' இன்று தேர்வுக் குழு கூட்டம் கூடவிருந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியாவின் உடல்தகுதி பிரச்னையால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஹர்திக் உடல்தகுதி பெற்றுவிட்டால், நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார். அவரது உடல்தகுதித் தேர்வுக்காக தேர்வுக்குழுவினர் காத்திருக்கின்றனர்.
ஒருவேளை ஹர்திக் பாண்டியா உடல்தகுதி பெறவில்லை என்றால், சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. இந்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கிறோம்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், மீண்டும் டெஸ்ட் அணியில் மூன்றாவது தொடக்க வீரராகத் தேர்வு செய்யப்படுவார்.
அதேபோல் வெளிநாட்டு மைதானங்களில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே ஆடுவார் என்பதால், கும்தீப் யாதவ் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக சைனி இடம்பெறுவார். ஒருநாள் போட்டிகளில் கேதார் ஜாதவ் தனது ஃபார்மை இழந்து வருவதால், அவரது இடத்திற்கு மீண்டும் ரஹானே இடம்பெறவேண்டும் என ஆலோசனைகள் நடைபெறுகிறது. எனவே அதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன'' என்றார்.
இதையும் படிங்க: 22 பவுண்டரி, 2 சிக்சர்... மாஸ் காட்டும் ப்ரித்வி ஷா