2011 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக உலகக்கோப்பை வென்றதை ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. அதேசமயம், இப்போட்டியில் இரண்டுமுறை டாஸ் போடப்பட்டதையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
முதலில் டாஸில் போடும்போது சங்ககரா சொன்னது நடுவருக்குச் சரியாக கேட்காததால், டாஸ் மீண்டும் இரண்டாவது முறையாக போடப்பட்டது. இதில், இலங்கை அணி வெற்றிபெற்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்ததால், இலங்கை அணி போங்காட்டம் ஆடியதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககராவுடம் இன்ஸ்டாகிராமில் உரையாடியபோது கேள்வி எழுப்பினார்.
இதற்கு சங்ககரா, "மும்பையில் ரசிகர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதுபோன்று இலங்கையில் நடந்ததில்லை. முதலில் டாஸ் போடும்போது நான் கேட்டது தோனிக்குச் சரியாக கேட்கவில்லை.
அவர் என்னிடம் நீங்கள் டைல் தானே கேட்டீர்கள் என்றார். இல்லை நான் ஹெட்ஸ் தான் கேட்டேன் என்றேன். பிறகு போட்டி நடுவர் நான் டாஸ் வென்றதாக கூறினார். ஆனால் தோனி இல்லை என்றார். அதனால் களத்தில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.
பிறகு மீண்டும் டாஸ் போடலாம் என தோனி கேட்டுக்கொண்டதால் இரண்டாவது முறையாக டாஸ் போடப்பட்டபோது நான் கேட்டதைப் போல ஹெட்ஸ் வந்தது. நல்வாய்ப்பாக அன்று நான் டாஸில் வெற்றிபெறவில்லை என்றால் இந்தியாதான் முதலில் பேட்டிங் செய்திருக்கும்.
ஒருவேளை அப்போட்டியில் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் உடற்தகுதியுடன் விளையாடியிருந்தால் நாங்கள் வெற்றிபெற்றிருப்போம். போட்டியின் முடிவு மாறியிருக்குமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அந்தப் போட்டியில் நாங்கள் சேஸ் செய்திருப்போம். அந்த அளவிற்கு மேத்யூஸ் நல்ல ஃபார்மில் இருந்தார்" எனப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: உலகக்கோப்பை ரீவைண்ட்: 28 வருட ஏக்கத்தை துடைத்தெறிந்த தோனி..!