ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடர் முடிந்த கையோடு இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது.
இத்தொடருக்காக இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, கே.எல்.ராகுலுக்கு துணைக்கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிசிசிஐ மீதும், வீரர்கள் தேர்வு குழு மீது பல்வேறு விமர்சனங்கள் எழத்தொடங்கியது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ரோஹித் சர்மா தற்போது அணியில் இடம்பிடிக்காமல் இருப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, “ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிகெதிரான இந்திய அணியிலிருந்து விலக்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவருகின்றனர். ஆனால், ரோஹித்தை தேர்வு குழுவினர் தேர்ந்தெடுக்காமல் இருந்ததற்கு, அவரது மருத்துவ அறிக்கையே காரணம்.
ரோஹித்தின் மருத்துவ அறிக்கையில், ‘ரோஹித் சர்மாவின் காயம் இன்னும் குணமடையவில்லை. இதனால் அவரை அணியில் சேர்க்காமல் இருப்பதே நல்லது. ஏனேனில் அவர் மீண்டும் விளையாடினால் அவரது காயம் மேலும் தீவிரமடையும். அதனால் அவர் அணியில் இடம்பெறாமல் இருப்பதே நல்லது’ என கூறப்பட்டுள்ளது.
தேர்வு குழுவினரும் இக்காரணத்திற்காகவே ரோஹித் சர்மாவை, ஆஸ்திரேலிய அணியுடனான தொடரிலிருந்து நீக்கியுள்ளனர். இருப்பினும் அவர் உடற்தகுதி தேர்வில் 100 விழுக்காடு தகுதியைப் பெற்றால் நிச்சயம் ஆஸி., தொடரில் பங்கேற்பார்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘இது என்னுடைய கடைசி போட்டியல்ல’ - தோனி பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!