இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பாக விளையாடிய இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியின்மூலம், இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தியதைப் போலவே, சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி (176, 127) அசத்தினார். இதன் மூலம், டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் வீரர் போன்ற பல்வேறு சாதனைகளைப் படைத்த இவர் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆட்டநாயகன் விருதைப் பெறும்போது ரோஹித் ஷர்மா கூறுகையில், ’எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கும் இந்த வாய்ப்பினை தந்த கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு நான் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். எனது ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதற்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்னரே, நான் டெஸ்ட்டில் தொடக்க வீரராக களமிறங்கப்படலாம் எனச் சிலர் தெரிவித்தனர். இதனால், வலைப்பயிற்சியில் பலமுறை, நான் புதிய பந்தில்தான் பேட்டிங் பயிற்சியை மேற்கொள்வேன். எனவே, இந்தப் போட்டியில் நான் தொடக்க வீரராக என்னை களமிறங்கச் சொன்னது எனக்கு ஒன்றும் ஆச்சரியமாக இல்லை’ என்றார்.
இதையும் படிங்க:
#RugbyWorldcup: 'முடிஞ்சா பிடிய்யா... பார்ப்போம்' - நமிபியாவை நடுங்க வைத்த நியூசிலாந்து!