இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து இன்ஸ்டாகிராம் நேரலையின் மூலம், நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது ஹர்பஜன் சிங் உங்களுடைய லட்சியம் என்ன? என்று ரோகித்திடம் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ரோஹித், 'வரவுள்ள மூன்று உலகக்கோப்பைத் தொடர்களில் (2020, 2021 டி20 உலகக்கோப்பை, 2023 ஒருநாள் உலகக்கோப்பை), இரண்டில் ஆவது இந்திய அணிக்கு கோப்பையைப் பெற்றுக் கொடுப்பதே என்னுடைய லட்சியம். அதேபோல் இந்திய அணியில் ஐந்து மற்றும் அதற்கும்மேல் களமிறங்கும் வீரர்களைப் பரிசோதித்து வருகிறோம். ஏனெனில், தொடக்க வீரர்களை இழந்ததும் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது.
அதனால் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இணைந்து 5,6,7ஆம் இடங்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வுசெய்து வருகின்றனர்' என்று தெரிவித்தார்.
இதனையடுத்து ஹர்பஜன் சிங், 'உலகக்கோப்பைத் தொடரில் கே.எல். ராகுலை ஆடும் லெவனிலிருந்து நீக்கிவிட்டு, விஜய் சங்கரை பயன்படுத்தியது' குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ரோஹித், 'நான் முதலில் இந்திய அணிக்காக விளையாடிய போதும் கூட அணியில் சேர்க்கப்படுவதும், நீக்கப்படுவதுமாகவே இருந்தேன். மேலும் ஒவ்வொரு வீரருடைய தனித்திறமைகளையும் கணக்கிடுவது அவசியம். மேலும் கே.எல்.ராகுலின் பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஐரோப்பிய மகளிர் சாம்பியன்ஷிப் தொடர் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு!