இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி, ரோகித் ஷர்மா இருவரும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்ந்து வருகின்றனர். ஒருநாள் போட்டிகளில் இவர்களது பார்ட்னர்ஷிப் பலமுறை அணியின் வெற்றிக்கு துணையாக இருந்துள்ளது. இந்த ஜோடி இதுவரை 77 போட்டிகளில் 4,732 ரன்களை சேர்த்துள்ளது. அதில், 17 சதங்களும், 15 அரைசதங்களும் அடங்கும்.
இந்நிலையில், இந்த ஜோடி இன்றைய போட்டியில் 27 ரன்களை சேர்த்தால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களை சேர்த்த முதல் ஜோடி என்ற புதிய சாதனை படைக்கவுள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், மழையால் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், இந்திய அணி டக்வொர்த் லூவிஸ் முறையில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றது.
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் தொடங்கவுள்ளது. கோலி - ரோகித் இருவரும் பல்வேறு சாதனைகள் படைத்திருந்தாலும், பார்ட்னர்ஷிப்பில் இந்த மைல் கல்லை எட்டினால், இவர்களுக்குள் பனிப்போர் இருப்பதாக ரசிகர்கள் நம்பப்படும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.