வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கட்டாக்கில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம், இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று, நடப்பு ஆண்டை வெற்றியுடன் முடித்துள்ளது. இந்தத் தொடருக்குப் பிறகு அடுத்த ஆண்டு ஜனவரியில் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் தீபக் சாஹர் விலகியதால் அவருக்கு பதிலாக நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, காயம் காரணமாக நீண்ட நாட்களாக இந்திய அணியில் விளையாடாமலிருந்த தொடக்க வீரர் ஷிகர் தவான், பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோர் இந்தத் தொடர் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.
டி20 தொடருக்கான இந்திய அணி : கோலி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, சிவம் துபே, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சாஹல், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், பும்ரா
நடப்பு ஆண்டை பொறுத்தவரையில், ரோஹித் சர்மா ஒருநாள் (1490 ரன்கள்), டெஸ்ட் (556 ரன்கள்), டி20 (396 ரன்கள்) என அனைத்துவிதமான போட்டிகளில் 2442 ரன்களை குவித்து அசத்தலான ஃபார்மில் உள்ளார். ஓய்வின்றி தொடர்ந்து இந்திய அணிக்காக போட்டிகளில் விளையாடிவந்ததால் இவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
போட்டி | இடம் | நாள் |
முதல் டி20 போட்டி | கவுகாத்தி | ஜனவரி 5 |
இரண்டாவது டி20 போட்டி | இந்தூர் | ஜனவரி 7 |
மூன்றாவது டி20 போட்டி | புனே | ஜனவரி 10 |
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார். ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், மனிஷ் பாண்டே, சிவம் துபே, ஜடேஜா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், சாஹல், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், பும்ரா

போட்டி | இடம் | நாள் |
முதல் ஒருநாள் போட்டி | மும்பை | ஜனவரி 14 |
இரண்டாவது ஒருநாள் போட்டி | ராஜ்கோட் | ஜனவரி 17 |
மூன்றாவது ஒருநாள் போட்டி | பெங்களூரு | ஜனவரி 19 |
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட்டின் தன்னிகரில்லா தலைவன் கிடைத்து 15 ஆண்டுகள் நிறைவு!