இந்த தொடரின் நான்காவது போட்டி மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஜான்டி ரோட்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணி, லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியுடன் மோதியது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியில் டேரன் கங்கா 31 ரன்களிலும், ரிக்கார்டோ பொவல் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரையன் லாரா நான்கு ரன்களில் அவுட்டானார். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் பால் ஹாரிஸ் மூன்று விக்கெட்டுகளும், அல்பி மோர்கல் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 144 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணியின் டாப் ஆர்டர் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாக சரிந்தன. தொடக்க வீரர் ஹெர்ஷெல் கிப்ஸ் (1), ஜாக் ருடாஃப் (5), மோர்னே வான் வைக் (10), மார்டின் வான் ஜார்ஸ்வெல்ட் (5) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணி 8.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்த நிலையில், ஜோடி சேர்ந்த ஜான்டி ரோட்ஸ், அல்பி மோர்கல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினர். இதனால், தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணி 18.3 ஓவர்களில் 146 ரன்களை எட்டியது. இதன்மூலம், இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஐந்தாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணி, இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது.
இதையும் படிங்க: வயசானாலும் இர்பான் பதானின் பேட்டிங்கும், முகமது கைஃபின் ஃபீல்டிங்கும் இன்னும் மாறவே இல்லை!