லண்டன்: "ரிஷப் பந்த் இல்லாத இந்திய அணியை இனி, என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது" என்று முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் இயான் பெல் கூறியுள்ளார். மேலும், நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்று தொடரிலும் ரிஷப் பந்த் தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
" ரிஷப் பந்த் இந்திய அணியின் எதிர்காலமாகத் திகழ்கிறார். அவர் இல்லாமல் ஒரு இந்திய அணியை இப்போது என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
இது ஒரு அரிய திறமை என்று நான் நினைக்கிறேன். பந்த் தனது தொடக்க காலத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்பது அனைவருக்கும் அமையாதது" என்று பெல் மேலும் கூறினார்.
நேற்று நடைபெற்ற தொடரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதில் ரிஷப் பந்த் 62 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணிக்கு வலுசேர்த்தது.
"இங்கிலாந்திற்கு எதிரான மூன்று தொடர்களிலும், அவரிடம் அமைதியான ஆட்டத்தைக் கண்டேன். இது அவரின் ஆக்ரோஷமான அணுகுமுறையை விட மிகவும் ஆபத்தானது.
மேலும், அவர் பேட்டிங் செய்ய வந்தவுடனேயே தனது ஆட்டத்தினால், பந்துவீச்சாளர்களின் அனைத்து வியூகங்களையும் அறிவதன் மூலம் அவர்களை நிலைகுலையச் செய்கிறார் என்றே தோன்றுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் அவர் அடித்த சதம், அவருக்கும் அணிக்கும் நிறைய நம்பிக்கையைத் தந்திருக்கும்," என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: கர்நாடக உசேன் போல்ட் ஸ்ரீநிவாஸ் கவுடா புதிய சாதனை!