இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு மாற்று வீரராக களமிறங்கி கவனம் ஈர்த்தவர் மார்னஸ் லபுசானே. தற்போது அவர் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். கடைசியாக அவர் ஆடிய 7 இன்னிங்ஸ்களில் 4 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். கடந்தாண்டு தொடக்கத்தின்போது தரவரிசையில் 110ஆவத்ய் இடத்திலிருந்த லபுசானே, தற்போது 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்துக்கு இணையான மற்றொரு பேட்ஸ்மேன் ஆடுவதால், 1990ஆம் ஆண்டு பார்த்த ஆஸ்திரேலியா அணியைப் போல் தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணி ஆட்டம் காட்டுகிறது. இதனிடையே ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன்னின் பேட்டிங் அவ்வப்போது விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது.
அதேபோல் டிம் பெய்ன்னின் வயதும் (35) முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இதனால் எதிர்கால ஆஸ்திரேலிய கேப்டனை உருவாக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசுகையில், "பெய்ன் இன்னும் ஒரு ஆண்டு காலம் கேப்டன்சிப்பை மேற்கொள்வார். அவரது வயது காரணமாக கேப்டன்சிப்பை எவ்வளவு ஆண்டுகள் தொடர்வார் என்பது குறித்து கூறமுடியாது. ட்ராவிஸ் ஹெட் தற்போது துணை கேப்டனாக உள்ளார்.
தற்போது அணியில் சிறப்பாக ஆடிவரும் மார்னஸ் லபுசானே இன்னும் 12 முதல் 18 மாதங்கள் சிறப்பாக ஆடி அணியில் நீடித்தால், அவர்தான் எதிர்கால கேப்டன் பொறுப்புக்குச் சரியாக இருப்பார்.
டிம் பெய்ன் தனது விரல்களில் ஏற்பட்ட காயங்களால் இத்தனை ஆண்டுகள் அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. உடல்தகுதியைப் பொறுத்தவரை வலிமையாகவே உள்ளார்" எனக் கூறினார்.
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலிய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 283 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்துள்ளது. லபுசானே, வேட் ஆகியோர் நாளைய ஆட்டத்தை தொடர்வார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வலிமையான ஸ்கோரை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்