கரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. கரோனாவால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக் சிறிது காலத்திற்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு பதிலாக ஆஷஸ் டெஸ்ட் தொடர், இந்தியா - பாகிஸ்தான் தொடர் நடத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு பரபரப்பான கிரிக்கெட் தொடரை பார்க்க வேண்டும் என்றால் சிறிது காலத்திற்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நிறுத்திவைக்க வேண்டும். குறிப்பாக, இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
அந்த தொடரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஆஷஸ் தொடரையும், இந்தியா - பாகிஸ்தான் தொடரையும் நடத்தலாம். இந்தியாவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், பாகிஸ்தானில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடத்தலாம்.
பல ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் தொடர் நடைபெறவில்லை என்பதால் ரசிகர்கள் நிச்சயம் இந்த தொடரை எதிர்பார்ப்போடு விரும்பி பார்ப்பார்கள். பரபரப்பும், சவாலும் நிறைந்த இந்த இரண்டு தொடர்களை நடத்துவதன் மூலம் ஐசிசிக்கும் நல்ல நிதி கிடைக்கும்" என்றார்.
இதையும் படிங்க: எனக்கு பயமும் இருக்கும்.. பதற்றமும் இருக்கும்... கேப்டன் கூல் தோனி!