பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20 போட்டி, 1 ஒருநாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. இப்போட்டியின்மூலம் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஹாரிஸ் ரவுஃப் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சோயப் மாலிக் 11 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டி20 போட்டியில் கம்பேக் தந்தார். அவர் இறுதியாக 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். கடந்த சில மாதங்களாகப் பாகிஸ்தான் அணி டி20 போட்டியில் படுமோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்திவந்தது.
கடைசியாக விளையாடிய ஆறு போட்டிகளிலும் அந்த அணி தோல்வியை மட்டுமே தழுவியது. குறிப்பாக சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் தோல்விகளைச் சந்தித்ததால், தொடர் தோல்விக்கு பாகிஸ்தான் அணி இம்முறை முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மைதானத்துக்கு வருகைதந்தனர்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்தது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான முகமது நைம் 43 ரன்களும் தமிம் இக்பால் 39 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷஹீன்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஷதப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 142 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அணியின் கேப்டனான பாபர் அசாம் இரண்டாவது பந்திலேயே டக் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அசான் அலி (36), முகமது ஹபிஸ் (17), இஃப்டிகர் அகமது (16), இமாத் வாசியம் (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் சோயப் மாலிக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசினார். இதனால், பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை எட்டியது. இதனால், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தத் தொடரில் 1-0 என்ற முன்னிலையில் உள்ளது.
இப்போட்டியில் 45 பந்துகளில் ஐந்து பவுண்டரி உட்பட 58 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த சோயப் மாலிக் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். சோயப் மாலிக்கின் கம்பேக் மூலம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதையும் படிங்க: 'உங்கள் தலையில் இருக்கும் முடியைவிட என்னிடம் அதிகமாகவே பணம் உள்ளது' - சேவாக்கிற்கு அக்தர் பதிலடி