கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் தங்ளது குடும்பத்தினருடனும், சமூக வலைதளங்களிலும் நேரத்தை செலவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனிடையே, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனியார் விளையாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஐபிஎல் போட்டிகள் நடைபெறாத பட்சத்தில், சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஹர்பஜன், "நான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீச முடியும் என்றால், சர்வதேச போட்டிகளிலும் என்னால் சிறப்பாக செயல்படமுடியும். ஏனெனில் ஐபிஎல் தொடர் மிகவும் சவால் நிறைந்ததாகும். உங்களால் ஐபிஎல் வீரர்களுக்கு சிறப்பாக பந்து வீச முடியும் என்றால் சர்வதேச போட்டிகளிலும் பந்துகளை வீச முடியும். ஏனெனில் உலகின் சிறந்த வீரர்கள் அனைவரும் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
மேலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக எவ்வித உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இருப்பினும் நான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் அதுவே மீண்டும் என்னை இந்திய அணிக்கு அழைத்துவரும். அப்படி ஒருவேளை சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்குவதாக இருந்தால், நான் நிச்சயம் அதனை செய்வேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘உமிழ்நீர் குறித்து ஐசிசி விதித்த தடை இடைக்கால நடவடிக்கை’ - அனில் கும்ளே!