இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். இதனால் விக்கெட் கீப்பர் பணியை கேஎல் ராகுல் மேற்கொண்டார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியின்போதும் ரிஷப் பந்த் அணிக்கு திரும்பாததால் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டதோடு, ஐந்தாம் ஆட்டக்காரராக களமிறங்கி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். நேற்று நடந்த மூன்றாவது போட்டியின்போது தவான் காயம் காரணமாக வெளியேற, உடனடியாக தொடக்க வீரராக களமிறங்கினார். கிட்டத்தட்ட மூன்று போட்டிகளிலும் மூன்று இடங்களில் களமிறங்கி அணியின் வெற்றிக்கு உதவினார். சில மாதங்களாக அணியில் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்படுவதால், தொடக்க வீரராக களமிறக்குவதா அல்லது மூன்றாவது வீரராக களமிறக்குவதா என்ற கேள்வி இந்திய அணி நிர்வாகத்திற்குள் தலைவலியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது திடீரென ஐந்தாவது இடத்தில் களமிறங்கி சிறப்பாக ஆடியதால், தொடர்ந்து ஐந்தாவது வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அணியின் கேப்டன் விராட் கோலி பேசுகையில், ''2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின்போது ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராக செயல்பட்டதால் இந்திய அணிக்கு ஒரு பேட்ஸ்மேனை சேர்த்துக்கொள்ள முடிந்தது. அதேபோல் தான் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டதால் ஒரு பேட்ஸ்மேன் சேர்த்துக்கொள்ளப்படுகிறார். இது இந்திய அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த இடத்தில் களமிறங்கினாலும் ராகுல் சிறப்பாக ஆடுகிறார். களமிறங்கிய முதல் பந்திலிருந்து அடித்து ஆடும் வீரர் ராகுல் இல்லை என்பதால், அவரால் எந்த இடத்தில் களமிறங்கினாலும் சூழலுக்கு தகுந்தாற்போல் ஆட முடியும் '' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆஸிக்கு எதிராக சதம்: விராட் சாதனையை சமன்செய்த ஹிட்மேன்