தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் திகழ்பவர் குயின்டன் டி காக். கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பதவியிலிருந்து டூ பிளஸிஸ் விலகியதையடுத்து, அந்த அணியின் கேப்டனாக குயின்டன் டி காக் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் பணிச்சுமை மற்றும் மனச்சோர்வு ஆகிய காரணங்களினால் சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக குயின்டன் டி காக் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆண்ட்ரூ ப்ரீட்ஸ்கே (Andrew Breetzke) கூறுகையில், “மனச்சோர்வு காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் குயின்டன் டி காக், சிறிது காலம் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளார். இச்சூழலில் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் அவருக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
சமீப காலங்களில் கிரிக்கெட் வீரர்கள் மனச்சோர்வு, பணிச்சுமை, மன உளைச்சல் போன்ற காரணங்களால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் மன உளைச்சல் காரணமாக சிறிது காலம் ஓய்வெடுப்பதாக அறிவித்திருந்தார்.
முன்னதாக கிரிக்கெட் விளையாட்டில் பணிச்சுமை, ஓய்வின்மை அதிகரித்துள்ளதாகவும், இதனால் வீரர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரும் புகர்களை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் 14: புது பெயருடன் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்!