ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் 3-ஆவது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெய்ன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் எடுத்தது. இதில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் 131 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது.
இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை எடுத்தது. இதில் சுப்மன் கில், புஜாரா தலா 50 ரன்களை எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா 176 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். அவருடைய இந்த நிதான ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்துள்ளார்.
ட்விட்டரில் ரசிகர் ஒருவர் புஜாராவின் நிதான ஆட்டம் பற்றி கேட்டதற்கு பதிலளித்த பாண்டிங், “இது சரியான அணுகுமுறை என நான் எண்ணவில்லை. அவர் ரன்கள் எடுப்பதில் இன்னும் கொஞ்சம் விரைவாகச் செயல்படலாம். ஏனெனில் அவருடைய நிதான ஆட்டம், எதிரே இருக்கும் நான் ஸ்டிரைக்கருக்கு கூடுதல் அழுத்தம் தருகிறது” என்று பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: IND vs AUS: பத்தாவது முறையாக வார்னரை வீழ்த்திய அஸ்வின்!