ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பட் கம்மின்ஸ். அவர் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதனிடையே ஐபிஎல் தொடருக்காக நடந்த ஏலத்தில் இவரை எடுக்க பல்வேறு அணிகளிடையே பெரும்போட்டி இருந்தது. இறுதியாக 15.5 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.
ஆனால் கரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்கவில்லை. இதனால் ஓய்வில் இருக்கும் வீரர்கள் ரசிகர்களுடன் சமூகவலைதளங்களில் உரையாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள் சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட உரையாடலில் பட் கம்மின்ஸ் கலந்துகொண்டார்.
அதில் நீங்கள் எந்த பேட்ஸ்மேனுக்கு பந்துவீச கஷ்டப்பட்டீர்கள் என ரசிகர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கம்மின்ஸ், '' நான் நிறைய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச கடினமாக உணர்ந்துள்ளேன். ஆனால் நான் சொல்லப்போகும் பதில் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கும். நான் மிகவும் கடினமாக உணர்ந்தது இந்திய அணியின் சட்டீஸ்வர் புஜாராவுக்கு தான். அவரது பேட்டிங் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்தார்.
கடந்த ஆண்டு நடந்த தொடரின் போது தகர்க்க முடியாத வீரராக ஆடிக்கொண்டிருந்தார். அவரை விக்கெட் வீழ்த்த கடினமாக உணர்ந்தோம். ஒருநாள் முழுக்க கவனமாக ஆடினார். தொடர்ந்து இரண்டாவது நாளும் அதீத கவனமாக ஆடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அளாவிற்கு என்னை சோதனை செய்தது வேறு யாருமில்லை'' என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது இந்திய வீரர் புஜாரா 1258 பந்துகளில் விளையாடி 521 ரன்களை எடுத்தார். இந்த ஆட்டம் பற்றி ஆஸ்திரேலிய அணியின் ஹெசல்வுட். நாதன் லயன் ஆகியோர் ஏற்கனவே பாராட்டினர். ஹெசல்வுட் ஒரு கட்டத்தில் புஜாராவின் ஆட்டத்தைப் பார்த்து அடுத்தத் தொடரில் மன்கட் செய்வேன் எனக் கூறியது இந்திய ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல் தர போட்டியில் 50 சதங்கள்... ஜாம்பவான்களின் வரிசையில் இணைந்த புஜாரா!