கடந்தாண்டு முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் தகுதியை புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது புதிய அணிகளுக்கு பிசிசிஐ வழங்கியது. இந்நிலையில், இந்தாண்டுக்கான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் உள்ளூர் தொடரில் உத்தரகாண்ட், பெங்கால், அஸ்ஸாம், சண்டிகர், மேகாலயா, நாகாலாந்து, ரயில்வேஸ், அருணாச்சாலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், சிக்கிம் உள்ளிட்ட அணிகளுடன் பிளேட் குரூப் பிரிவில் புதுச்சேரி இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு வீரர் அருண் கார்த்திக், கர்நாடக அணியின் பந்துவீச்சாளர் வினய் குமார், ஹிமாச்சலப் பிரதேச வீரர் பராஸ் தோக்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் புதுச்சேரி அணிக்காக இந்த சீசனில் விளையாடுகின்றனர். இதையடுத்து, அந்த அணி விளையாடிய ஏழு லீக் போட்டிகளில், இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில், மற்ற ஐந்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று சிறப்பான ஃபார்மில் இருந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் அந்த அணி மணிப்பூர் அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய மணிப்பூர் அணி புதுச்சேரி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 109 ரன்களுக்கு சுருண்டது. புதுச்சேரி அணி தரப்பில் வினய் குமார் நான்கு விக்கெட்டுகளையும் சகார் உதேசி மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து, 110 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் செய்த புதுச்சேரி அணியில் அருண் கார்த்திக்கின் அதிரடியால், அந்த அணி 15.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இதன் மூலம் புதுச்சேரி அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் 43 பந்துகளை எதிர்கொண்ட அருண் கார்த்திக் ஆறு பவுண்டரி, நான்கு சிக்சர் என 67 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், புதுச்சேரி அணி 28 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள தனது கடைசிப் போட்டியில் புதுச்சேரி அணி, அஸ்ஸாம் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.