பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் போட்டி 2020இன் லீக் போட்டிகள் அனைத்துமே கடந்த மார்ச் மாதமே முடிவடைந்தது. பின்னர், கரோனா அச்சம் காரணமாக பிளே ஆஃப் சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்று நவம்பர் 14ஆம் தேதி மீண்டும் தொடங்கியது. கராச்சி கிங்ஸ், முல்தான் சுல்தான்ஸ்,பெஷாவர் ஜால்மி,லாகூர் குவாலண்டர்ஸ் ஆகிய நான்கு அணிகளும் மோதின. அதில், கராச்சி கிங்ஸ், லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் வெற்றிபெற்று முதன்முறையாக இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றன.
கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமீம் இக்பால் 35 ரன்களும், ஃபக்கர் ஜமான் 27 ரன்களும் குவித்திருந்தனர்.
எளிதான இலக்குடன் களத்தில் இறங்கிய கராச்சி கிங்ஸ் அணியினர், ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கினர். 135 ரன் இலக்கை வெறும் 18.4 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பில் வென்றுக்காட்டினர். கராச்சி அணியின் முக்கிய வீரரான் பாபர் அசாம், ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று 49 பந்துகளில் 63 ரன்களை குவித்தார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் முதன்முறையாக கராச்சி கிங்ஸ் கோப்பையை வென்றுள்ளது. இறுதி போட்டியில் சிறந்த வீரர் மற்றும் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் ஆகிய இரண்டு விருதையும் பாபர் அசாம் தட்டிச் சென்றார்.