விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டிருந்தது. இதனிடையே, முதுகில் காயம் ஏற்பட்டதால் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றால் இந்திய அணிக்கு பேட்டிங், பவுலிங் இரண்டிலும் உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஹார்திக் பாண்டியாவின் வருகையால் பந்துவீச்சில் இந்திய அணிக்கு கூடுதல் வாய்ப்பை வழங்குகிறார். அத்துடன் போட்டிகளில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது எதிரணிகளுக்கு அழுத்தத்தைத் தர ஒரு பந்து வீச்சாளராக அவர் உதவியாக இருப்பார்.
சிட்னி போட்டிக்கு முன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக பந்துவீசினால் சிட்னியில் நடைபெறும் நான்காவது போட்டியில் அவர் மூன்றாவது சீமராக (பவுலர்) செயல்பட முடியும். அதனால் இரண்டாவது ஸ்பின்னரையும் அணிக்கும் சேர்க்க முடியும்.
அதேபோல பேட்டிங்கில் அவர் ஏழாவது வரிசையில் களமிறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வலிமையாக இருக்கும்" என்றார்.