பேட்மிண்டன் பிரீமியர் லீக் தொடருக்காக ஐதராபாத்தில் நடக்கவுள்ள போட்டிகள் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக ஐதராபாத் அணியின் பி.வி. சிந்து, அந்த அணியின் உரிமையாளர் வி.கே. ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பி.வி. சிந்து பேசுகையில், '' ஒலிம்பிக் தொடருக்கான பயிற்சிகள் சரியாக நடந்துவருகிறது. ஆனால் அதற்கு முன்னதாக சில தொடர்களில் ஆடவுள்ளேன். அதனால் ஒலிம்பிக் தொடருக்கான பயிற்சிகள் படிப்படியாக உயர்வடையும். ஒலிம்பிக் எனது சிறந்த ஆட்டத்தை நிச்சயம் வெளிப்படுத்துவேன்.
பேட்மிண்டன் பிரீமியர் லீக் தொடரில் ஐதராபாத் அணிக்காக ஆடுகிறேன். இந்த லீக் தொடர்களில் வெற்றி, தோல்வியைப் பற்றி சிந்திப்பதில்லை. ஒரு அணிக்காக எங்களின் 100 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோமா என்பதை தான் பார்க்கிறோம்'' என்றார்.
பின்னர் ஐதராபாத் ஹண்டர்ஸ் அணியின் உரிமையாளர் வி.கே. ராவ் பேசுகையில், '' மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது பெற்றுள்ள பி.வி. சிந்துவுக்கு எனது வாழ்த்துகள். எனது அணியின் கேப்டனாக பி.வி. சிந்து பதவி வகிப்பது பெருமையாக உள்ளது. ஐதராபாத் அணியால் நஷ்டம் ஏற்பட்டாலும், பிரச்னை இல்லை. அதனை நாங்கள் சரி செய்துகொள்வோம். இந்த முறை எங்கள் அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்'' என்றார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் முகுருசா, ஹெலப்!