பாகிஸ்தானில் கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அந்நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான நிலையிலும் பாகிஸ்தான் மக்கள் இந்த வைரஸின் அச்சுறுத்தலை உணராமல் அலட்சியமாக இருக்கிறார்கள் என அந்த அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
"இன்று ஒருசில முக்கியமான வேலைக்காக நான் காரில் வெளியே சென்றுவிட்டு உடனடியாக வீடு திரும்பினேன். எனது சுற்றுப்பயணத்தின்போது நான் யாருடனும் கை குலுக்குவும், கட்டிப்பிடிக்கவும் இல்லை. ஆனால், பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் யாரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று என்பதை உணராமல் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஒரே பைக்கில் நான்கு பேர் சுற்றுலா செல்வதைப் போல் பயணிக்கிறார்கள். தெருவோரக் கடைகளிலும் மக்கள் வழக்கம் போல் உணவு சாப்பிடுகிறார்கள். பல்வேறு இடங்களிலும் மக்கள் பயணிக்கிறார்கள்.
கோவிட்-19 வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவிவரும் இந்த நேரத்தில் ஏன் உணவகங்கள் மூடப்படாமல் உள்ளன. இதுபோன்ற பல்வேறு விஷயங்களை பார்த்தபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதுபோன்ற இக்கட்டான நிலையில், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும். இந்தியர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். ஆனால், பாகிஸ்தானில் அப்படியான நிலையில்லை. மக்கள் வெளியே செல்வதை இங்கு தடுக்க முடியாது. வீட்டில் தனிமைப்படுத்தியிருப்பதைத் தவிர்த்து மக்கள் வெளியே சென்று ஒருவரை தொடர்பு கொள்வதால்தான் 90 விழுக்காடு இந்த கோவிட் -19 வைரஸ் பரவுகிறது.
இது மிகவும் ஆபத்து என்பதால், இந்த வைரஸை கட்டுப்படுத்த விரைவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன். இத்தாலி ஊரடங்கு உத்தரவை காலம் தாழ்த்தி அமல்படுத்திய காரணத்தால்தான் பெரும் விளைவுகளைச் அந்நாடு சந்தித்தது. மேலும் மக்கள் தங்களது அத்தியாவசியப் பொருள்களை வாங்கிய பிறகு இந்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். இதைச் சொல்வதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். ஆனால், கோவிட்-19 வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இதைத் தவிர வேறு வழியில்லை. கோடைக்காலத்தில் இந்த கோவிட்-19 வைரஸ் பரவாது என்ற மூட நம்பிக்கையுடன் இல்லாமல் பாதுகாப்புடன் இருப்போம்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் எதிரொலி: பாகிஸ்தான் முழுவதும் ஊரடங்கு உத்தரவு?