இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் ஜூன் 28ஆம் தேதி இங்கிலாந்து புறப்படவுள்ளனர். அதன்பிறகு பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
ஆனால் இதிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கச் செயலாளர் வாசிம் கான் பேசுகையில், ''சோயிப் மாலிக்கின் மனைவி, குழந்தைகள் ஆகியோர் இந்தியாவில் உள்ளனர். இவர் பிப்ரவரி மாதம் பிஎஸ்எல் தொடரில் பங்கேற்பதற்காக சியால்கோட் வந்தார்.
அதன்பிறகு கரோனா வைரஸ் பரவலால் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் மாலிக் தனது குடும்பத்தினரைப் பிரிந்து 5 மாதங்கள் ஆகிவிட்டன. இதனால் அவர் சில காலம் குடும்பத்தினரோடு நேரம் செலவிட்ட பின்னர், ஜூலை 24ஆம் தேதி இங்கிலாந்து செல்வார். இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.