இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உலபின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தார். இவர் ஓய்வு பெற்றப் பிறகு இந்திய அணிக்கு பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அணிக்காக வெற்றித்தேடித் தரக்கூடிய ஆல்ரவுண்டர்கள் யாரும் இடம்பெறாமல் இருந்துவந்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியில் ஆல்ரவுண்டராக வலம்வரும் ஹர்திக் பாண்டியா தனது அதிரடியான ஆட்டத்தால் அணிக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார். இதனால், இவரை ரசிகர்கள் சிலர் கபில்தேவுடன் ஒப்பிடத் தொடங்கினர். கபில்தேவுடன் ஹர்திக் பாண்டியாவை ஒப்பிடுவது குறித்து பலரும் பலவிதமான முறையில் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவால் கபில்தேவ் ஆக முடியாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"கபில்தேவ், இம்ரான் கான் இருவரும் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள். அவர்களுக்கு மத்தியில் ஹர்திக் ஹர்திக் பாண்டியா எங்கேயோ இருக்கிறார். அதனால், அவரை கபில்தேவுடன் ஒப்பிடுவது முதிர்ச்சியற்ற செயலாகும். நானும் ஆல்ரவுண்டர்தான். அதற்கென்று இம்ரான் கான், கபில்தேவுடன் நான் ஒப்பிடப்பட்டால் அது முற்றிலும் தவறு. ஹர்திக் பாண்டியா நல்ல வீரர்தான். ஆனால் அவர் கபில்தேவ் போன்ற தலைசிறந்த ஆல்ரவுண்டராக வேண்டும் என்றால் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, பும்ராவெல்லாம் சிறந்த பந்துவீச்சாளரே இல்லை. அவர் சிறு குழந்தைதனமான பந்துவீச்சாளர் என அப்துல் ரசாக் விமர்சித்திருந்தார். இது குறித்து அவர் பேசுகையில், நான் பும்ரா குறித்து தெரிவித்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அவரை நான் மெக்ராத், வாசிம் அக்ரம், கர்ட்லி ஆம்ப்ரூஸ் ஆகியோருடன் ஒப்பிடுவதால்தான் அதை கூறினேன். அவர்கள் இருந்த காலத்தில் பந்தை எதிர்கொள்ளவே கடினமாக இருக்கும். ஆனால் தற்போது அப்படி இல்லை. தற்போது பும்ரா சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருகிறார் என்றார்.