பலத்த பாதுகாப்பிற்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன் படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் தனுஷ்கா குணத்திலக, அவிஷ்கா ஃபெர்னாண்டோ சிறப்பானத் தொடக்கத்தை தந்தனர். அவிஷ்கா நான்கு ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பின் களமிறங்கிய அணியின் கேப்டன் லஹிரு திரிமன்னே, குணத்திலகவுடன் இணைந்து அணியின் ரன்குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடி வந்த குணத்திலக தனது இரண்டாவது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார்.
அதிரடியாக விளையாடிய குணத்திலக 16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் என மொத்தம் 133 ரன்களை விளாசித்தள்ளி தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின் சீரான இடைவேளையில் விக்கெட்டை இழக்கத் தொடங்கிய இலங்கை அணி கடைசியில் தசுன் ஷானகவின் அதிரடி ஆட்டத்தினால் 50 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 297 ரன்களை எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக குணத்திலக 133 ரன்களையும், தசுன் ஷானகா 43 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முஹமது அமிர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இதையும் படிங்க: #AUSWvsSLW: 'அடி...சரவெடி' - தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!