பத்தாண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 70 ஓவர்களுடன் கைவிடப்பட்டது.
இதனையடுத்து நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 18 ஓவர்களை மட்டும் வீசியிருந்த நிலையில் மழையினால் ஏற்பட்ட வெளிச்சமின்மை காரணமாக இலங்கை அணி 263 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில், ஆறு ஓவர்களை மட்டும் வீசி இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து நீடித்த மழை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது. இதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களை எடுத்துள்ளது.
இலங்கை அணி தரப்பில் தனஞ்ஜெய 87 ரன்களுடனும், பெரெரா ஆறு ரன்களுடனும் நாளை நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளனர். பாகிஸ்தான் அணி சார்பில் நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: உலகக்கோப்பை நாயகர்களை ஒருநாள் அணியிலிருந்து விலக்கிய இங்கிலாந்து! காரணம் இதுதான்!