இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு மாபெரும் முத்திரை பதித்துள்ளார். அவர் தனது அசாதாரண பேட்டிங் திறமையின் மூலம் பல சாதனைகளைப் படைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். இந்திய ரசிகர்களால் ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலிக்கு உலகம் முழுவதிலும் ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், நேற்று லாகூரில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. அந்தப்போட்டிக்கு வந்திருந்த ரசிகர் ஒருவர், ‘விராட் கோலி நீங்கள் பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்’ என்ற வாசகங்களுடன் கூடிய பதாகையை வைத்திருந்தார். இதனை அங்கு வந்திருந்த மற்றொரு விராட் கோலியின் ரசிகர் பார்த்துவிட்டார்.
கோலியின் காதுகளுக்கு இந்த செய்தி செல்ல வேண்டும் என்று கருதிய அவர், உடனடியாக அந்தப் படத்தை ட்விட்டர் மூலம் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பல்வேறு பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளைப் பதிவிட்டனர்.
முன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணியினர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்நாட்டிற்குச் செல்வதை சர்வதேச கிரிக்கெட் அணிகள் தவிர்த்துவிட்டன. அதிலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல் காரணங்களாலும் இருநாடுகளுக்கு இடையேயான தனிப்பட்ட கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் உள்ளது. இரு நாட்டு அரசாங்கமும் வெறுப்புணர்வை மறந்து நட்பு பாராட்டினால் மட்டுமே கோலி ரசிகரின் ஆசை நிறைவேறும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.