இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார். இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்தாண்டு ஐபிஎல் தொடரின் போது புவனேஷ்வர் குமார் காயமடைந்தார்.
இதையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்தும் முற்றிலும் விலகினார். இந்நிலையில் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் புவனேஷ்வர் குமார், ஜனவரி மாதத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடற்தகுதி தேர்வுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியானது.
இருப்பினும் அவர் தொடர்ச்சியான காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், அவர் மேலும் ஆறு மாதங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என அணி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரிலும் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து விளையாட்டு பிசியோதெரபிஸ்ட் ஹீத் மேத்யூஸ் கூறுகையில், “வேகப்பந்து வீச்சில் உள்ள சிக்கல் என்னவென்றால், இது உடலில் பெரும் எண்ணிக்கையை ஏற்படுத்துகிறது. முதுகெலும்பு, தசைபிடிப்பு, தொடை எலும்பு ஆகிய பகுதிகளிலேயே புவனேஷ்வர் காயமடைந்துள்ளார்.
இதனால் புவனேஷ்வர் மீண்டும் விளையாட்டிற்கு திரும்பினாலும் அவரது பந்துவீச்சில் சில மாற்றங்கள் இருக்கும். உதாரணமாக குறைந்த வேகம், பந்தை ஸ்விங் செய்வதில் தடுமாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை அவர் சந்திக்க நேரிடும். அதனால் அவர் இன்னும் சில காலம் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.
மருத்துவர் கூறுவது போல் புவனேஷ்வர் குமார் 6 மாதங்கள் ஓய்வில் இருந்தால், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில்தான் மீண்டும் களமிறங்குவாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:'இந்தியாவிற்காக பதக்கம் வெல்வதே எனது கனவு' - பாலக் கோலி