இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற டிச.17ஆம் தேதி தொடங்க உள்ளது. அடிலெய்டில் நடைபெறும் இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரின்போது ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் காயமடைந்தார். பின்னர் காயம் காரணமாக அவர் டி20 தொடரிலிருந்தும் விலகினார். இந்நிலையில் அவரது காயம் குணமடையாததால், இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து வார்னர் விலகியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், "வார்னர் இல்லாதது எங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆனாலும் எங்களிடம் அறிமுக தொடக்க வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா போன்ற வலிமையான அணியுடன் எங்களது வலிமை எவ்வாறு உள்ளதென்பதை சோதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இருப்பினும் இந்திய அணியில் இஷந்த் சர்மா இடம்பெறாதது எங்களுக்கு பலனை அளிக்கும் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் கடந்த முறை அவரது பந்துவீச்சு அபாரமாக இருந்தது. ஆனாலும் பும்ரா, ஷமி, உமேஷ் என வலிமையான பந்துவீச்சாளர்கள் இருப்பது எங்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.
அதேசமயம் சுழற்பந்துவீச்சில் அஸ்வின், குல்தீப், ஜடேஜா ஆகியோர் இருப்பதால், அவர்களை சமாளிப்பது சற்று கடினமாகவே இருக்கும். ஏனெனில் சமீபத்தில் அவர்களது ஆட்டம் சிறப்பானதாக அமைந்துள்ளது. எதுவாயினும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!