சிறப்பாக விளையாடி ஆஷஸ் கோப்பையைத் தக்க வைத்த ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணியுடன் ஆடிய இரு உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்று வலுவான அணியாகத் திகழ்கிறது. இரண்டாவது போட்டியில், வார்னர் முச்சதம் அடிக்க லபுஸ் சாக்னே 169 ரன்கள் எடுத்து அணியை இன்னிங்ஸ் வெற்றி பெற வைக்க பெரிதும் உதவியிருந்தனர்.
ஆஷஸ் தொடரில், ஸ்டீவ் ஸ்மித் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சாதனையைப் படைத்து மிரட்டினார். ஆஷஸ் தொடரில் ஃபார்மை இழந்து தவித்த வார்னரும் தற்போது மீண்டும் அதிரடியான ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.
நாதன் லயனின் ஸ்பின்னும், மிட்செல் ஸ்டார்க்கின் வேகமும் அந்த அணிக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்திலும் வீழ்த்த முடியாத அணியாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் ஆஸ்திரேலியா அணி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில், '' தற்போது ஆஸ்திரேலிய அணி இருக்கும் ஃபார்முக்கு, அதனை வீழ்த்துவதற்கான அத்தனை கருவிகளையும் (சிறந்த வீரர்கள்) இந்திய அணி மட்டுமே வைத்துள்ளது. எனவே, இந்திய அணி மட்டுமே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தக் கூடிய திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று வீறுநடைப் போட்டு வரும் இந்திய அணி, உலகக்கோப்பை டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு உள்ளது. இந்திய அணி கடைசியாக விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியே அடையாமல் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாக். எதிராக ஐந்தாவது தொடர் வெற்றி... 20 ஆண்டுகளாக சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!