ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தாலும், இன்றளவும் அவரது பவுலிங்கைப் பார்த்து சிலாகிக்காத ரசிகர்களே இருக்கமாட்டார்கள்.
ஒரு லெக் ஸ்பின்னரால் பந்தை இந்த அளவிற்கு சுழல வைக்க முடியுமா என்ற அளவில் அவரது பந்துவீச்சு இருந்ததே அதற்கு முக்கிய காரணம்.
நான்கு ஸ்டெப்புகள் நடந்து சின்னதாக ஒரு ஓட்டம் ஓடி பந்து வீசுவார். பார்ப்பதற்கு இவரது பவுலிங் ஆக்ஷன் ஈசியாக தெரிந்தாலும் அதை எதிர்கொள்ளவது மிகவும் கடினம்.
1992இல் சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் அறிமுகமானாலும் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது 1993இல் ஓல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டிதான்.
அப்போட்டியில் இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங் வார்னேவின் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராக இருந்தார்.
அப்போது, வார்னே வீசிய பந்து லெக் ஸ்டெம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆகி, ஆஃப் ஸ்டெம்பை தாக்கியது. எப்படி இந்த அளவிற்கு பந்து சுழன்றது என புரியாமல் மைக் கேட்டிங் அதிர்ச்சியில் உறைந்தார். ஷேன் வார்னேவின் இந்த பந்துவீச்சைக் கண்டு வர்ணனையாளர்கள் சிலாகித்தனர்.
பின்நாட்களில் இதுதான் நூற்றாண்டில் வீசப்பட்ட சிறந்த பந்து (Ball of the century) என அங்கீகரிக்கப்பட்டது. இதில், ஆச்சரியம் என்னவென்றால், இங்கிலாந்து மண்ணில் அவர் வீசிய முதல் பந்தே நூற்றாண்டின் சிறந்த பந்தாக மாறியது.
ஷேன் வார்னேவுக்கான இந்த அங்கீகாரமும், கொண்டாட்டமும் ஆரம்பித்து இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போட்டிக்கு பிறகு ஷேன் வார்னே படைக்காத மேஜிக் இல்லை.
1992 முதல் 2007ஆம் வரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வார்னே 708 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.