இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரர், கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் போன்ற பல புனைப் பெயர்களை பெற்றவர் சச்சின் டெண்டுல்கர். நவம்பர் 15, 1989 முதல் நவம்பர் 16, 2013 வரை என 22 யார்டுகளுக்குள்ளேயே 24 ஆண்டுகள் பயணித்த இவர், இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக இதே நாளில் (நவம்பர் 14) களமிறங்கினார்.
மும்பை வான்கடே மைதானத்தில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. சச்சின் விளையாடிய 200ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும். முரளி விஜய் அவுட்டானதையடுத்து தனது 200ஆவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வதற்காக சச்சின் களமிறங்கினார்.
அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நடுவர்கள் காட் ஆஃப் ஹானர் தந்து கவுரவப்படுத்தினர். எப்போதும் இருந்ததைவிட அந்த நாளில் மைதானம் முழுவதும் சச்சின் சச்சின் சச்சின் என்ற முழக்கம் அதிகமாக கேட்டது. அவர் பேட்டிங்கில் ஒவ்வொரு முறை ஸ்டிரைக்கில் வரும் போது இதேதான் ஒலித்துக்கொண்டிருந்தது. அவரது பேட்டிங்கை பார்க்க டி.வி-க்கு முன்பும் ஏராளமான ரசிகர்கள் கூடினர்.
மறக்க முடியாத தருணங்களுடன் சிறப்பாக பேட்டிங் செய்தார் சச்சின். அவர் கடைசியாக அடித்த ஒவ்வொரு ஷாட்டும் துல்லியமாக இருந்தது. முதல் நாள் முடிவில் 36 ரன்கள் சச்சின் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது நாள் அவருக்கு ரொம்பவே ஸ்பெஷலான நாள். ஏனெனில் தான் கிரிக்கெட்டில் அறிமுகமான அதே நாளில் (நவம்பர் 15) அவர் அரைசதம் அடித்து அசத்தினார் சச்சின்.
சிறப்பாக பேட்டிங் செய்த லிட்டில் மாஸ்டர் கடைசியாக மீண்டும் ஒருமுறை சதம் விளாச மாட்டாரா? என்ற எதிர்பார்ப்புக் கூட அவர், 74 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்த மைதானமே பின் டிராப் சைலென்டில் இருந்தது. அந்த அமைதி முன்பு சச்சின் அவுட்டாகும் போது இருந்திருந்தாலும், அந்த நாள் மிகவும் கஷ்டமாக இருந்தது. இன்றும் சச்சினின் பேட்டிங்கைப் பார்த்தால் நமக்கு ஒரு விதமான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.