இந்திய கிரிக்கெட்டின் ஆளுமையாக விளங்கியவர் கபில்தேவ். அணியில் ஒரு ஆல்ரவுண்டர், கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் அவர். அவர் இல்லையென்றால் இந்திய அணிக்கு 1983இல் உலகக் கோப்பை கிடைத்திருக்காது என்பதே நிதர்சனம். தனது ஆரம்பக் காலக்கட்டத்தில் எந்த அளவிற்கு ஆற்றலுடன் இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாரோ அதே அளவிலான ஆற்றலுடன்தான் இறுதிவரை விளையாடினார்.
1978ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டுவரை இந்த 16 ஆண்டுகளில் கபில்தேவ் படைத்த சாதனைகள் ஏராளம். அந்த வகையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை கபில்தேவ் முறியடித்து இன்றோடு 26 ஆண்டுகள் கடந்துவிட்டன.
1973ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடிய ஹாட்லி 1990இல் ஓய்வுபெறும்போது 86 போட்டிகளில் 431 விக்கெட்டுகளை கைப்பற்றி, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார். அந்த சாதனையை கபில்தேவ் பிப்ரவரி 8, 1994இல் இலங்கை அணிக்கு எதிராக முறியடித்தார். அகமதாபாத்தில் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஹசன் திலக்கரத்னாவின் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை எட்டினார்.
கபில்தேவின் இந்த சாதனையை கெளரவிக்கும் விதமாக அப்போது மைதானத்தில் 432 பலூன்கள் பறக்கவிடப்பட்டன. மேலும், அவருக்கு ரசிகர்கள் எழுந்து நின்று ஒரு நிமிடத்திற்கு (Standing Ovation) கைகளை தட்டி பாராட்டினர். கபில்தேவ் இறுதியாக ஓய்வுபெறும்போது 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கபில்தேவ் வசமிருந்த இந்த சாதனையை 1999இல் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வால்ஷ் முறியடித்தார்.
தற்போது இந்த பட்டியலில் முரளிதரன் முதலிடத்திலும், வார்னே இரண்டாவது இடத்திலும், அனில் கும்ப்ளே மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். இதில், கபில்தேவ் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: நான்கு பந்துகளில் கபில் தேவ் செய்த மேஜிக்... லார்ட்ஸ் டெஸ்ட் மெமரீஸ்