2017இல் மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்த தொடரின் அனைத்து குரூப் போட்டிகளிலும் ஸ்மிருதி மந்தானா, கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மூன்றாண்டுகளுக்கு முன் இதே நாளில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா அப்போதைய நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. பலம் வாய்ந்த ஆஸி.க்கு எதிரான இப்போட்டியில் இந்தியா வெல்லுமா வெல்லாத என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
ஆனால் மழையின் காரணமாக ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணி 35 ரன்களுக்குள் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா - பூனம் ராவத் ஆகியோரை இழந்தது. இந்தச் சூழலில் மூன்றாவது வீராங்கனையாக வந்த கேப்டன் மிதாலி ராஜ் உடன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்தார்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 20 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்தது. ரன்ரேட் 4 புள்ளிகளில் செல்ல, 25ஆவது ஓவரில் பீம்ஸ் பந்தில் கேப்டன் மிதாலி ராஜ் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கிட்டத்தட்ட அணியின் நம்பிக்கை மொத்தமாகவே தகர்ந்தபோது களத்தில் இருந்த ஹர்மன்ப்ரீத் அதிரடியாக ஆடத்தொடங்கினார்.
ஆஸி. வீராங்கனை பீம்ஸ் வீசிய 27ஆவது ஓவரில் சிக்சர், பவுண்டரி என அடுத்தடுத்து அடித்து ஸ்டைலாக அரைசதத்தை ஹர்மன் கடந்தார். அதன்பின் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்சர் என வான வேடிக்கை நிகழ்த்தி 90 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.
64 பந்துகளில் அரைசதம் விளாசிய ஹர்மன், அடுத்த 50 ரன்களை 26 பந்துகளில் எடுத்து மகளிர் கிரிக்கெட்டின் மகத்துவத்தை அறிய வைத்தார்.அதோடு அவரது இன்னிங்ஸ் நிற்கவில்லை. ஆஸ்திரேலிய வீராங்கனை கார்டனர் வீசிய 37ஆவது ஓவரில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 22 ரன்களை விளாசினார்.
அதில் ஒரு சிக்சர் 95 மீட்டர்களைக் கடந்து மைதானத்தின் மேல் சென்று விழுந்தது. ஆஸ்திரேலிய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் துட்சமென சிக்சர்களாக பறக்கவிட்டார். இறுதியாக இந்திய அணி 42 ஓவர்கள் முடிவில் 281 ரன்களை எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன்களை எடுத்தார். அதில் 20 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும்.
இவரது இந்த அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. தனது அபாரமான இன்னிங்ஸால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மகளிர் கிரிக்கெட்டை பார்க்க வைத்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். இதற்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சரித்திரங்கள் படைக்கப்பட்டாலும் அன்று அவரது ஆட்டம்தான் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய சரித்திரமாக பார்க்கப்படுகிறது.