இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (பிப். 5) தொடங்குகிறது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடந்த சில நாள்களாகத் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் இத்தொடரில் வெற்றிபெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இடக்கை தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டுவந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் ஒல்லி போப் தற்போது காயத்திலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளார். இதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவர் இணைக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின்போது ஒல்லி போப் தனது இடக்கை தோள்பட்டையில் காயமடைந்து, சிகிச்சைப் பெற்றுவந்தார்.
தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூசிலாந்துடன் இறுதிப்போட்டியில் மோதுவது யார்?