ஒவ்வொரு ஆண்டின் சம்மரிலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழாவைப்போல் கோலாகலமாக நடக்கும். ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம், ஆனால் ரசிகர்கள் மைதானத்தை கூடுவதை தவிருங்கள் என அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின்போது மைதானங்களில் ரசிகர்களை அனுமதிக்காமல் போட்டிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு மைதானங்களில் ரசிகர்களின்றி ஐபிஎல் போட்டிகள் நடந்தால் ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். இதுபற்றி உரிமையாளர்களில் ஒருவர் பேசுகையில், '' மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே. அதனால் எங்களுக்கு வரும் இழப்புகள் ஒரு பிரச்னையில்லை. ஐபிஎல் போட்டிகள் நடக்காமல் போவதைவிடவும், கதவுகளை அடைத்துக்கொண்டு போட்டிகள் நடப்பது மேல்.
ஐபிஎல் நடத்துவதற்கு ரசிகர்களை அனுமதிக்காமல் இருப்பது மட்டுமே ஒரே வழி. ஆனால் பிசிசிஐ மத்திய அரசுடன் ஆலோசனை செய்து வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை என்றால் வியாபார ரீதியாக நிச்சயம் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே இந்தியா வந்துவிட்டது. இங்கிலாந்து வீரர்களும் இலங்கையில் உள்ளனர். நியூசிலாந்து அணி ஏற்கனவே ஆச்திரேலியாவில்தான் உள்ளது. அதனால் வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க வேண்டும். அதற்கு பிசிசிஐ நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' எனத் தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை வெளிநாட்டு பயணிகளுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரசிகர்கள் இல்லாமல் நடைபெறவுள்ள லெஜண்ட்ஸ் போட்டிகள்!