இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தப் போட்டி நடக்கும் வெலிங்டன் மைதானத்தில் நியூசிலாந்து அணி 2014ஆம் ஆண்டுக்கு பின் தோல்வியைச் சந்தித்தது இல்லை என்பதால், இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், காயம் காரணமாக விலகியதால், இந்தப் போட்டியில் டிம் சவுதி தலைமையில் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. அவருக்கு பதிலாக டேரில் மிட்சல், கிராண்ட்ஹோமிற்கு பதிலாக டாம் ப்ரூஸும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மாவுக்கு, ஷமி, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், சைனி, வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றிக்காகவும், இந்திய அணி வெற்றியைத் தொடர வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குவதால் ரசிகர்களிடையே இந்தப் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, சிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி.
நியூசிலாந்து அணி விவரம்: டிம் சவுதி (கேப்டன்), கப்தில், காலின் முன்ரோ, டாம் ப்ரூஸ், ராஸ் டெய்லர், டிம் செய்ஃபெர்ட், டேரில் மிட்சல், சாண்ட்னர், ஸ்கார்ட் குக்லஜின், இஷ் சோதி, பென்னட்.