நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் அகர்வால் 1 ரன் மட்டும் எடுத்து வெளியேற, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 9 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
பின்னர் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்த நிலையில் ப்ரித்வி ஷா 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 62 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து வந்த கேஎல் ராகுல் நிதானமாக ஆட, ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியைத் தொடர்ந்தார். இந்த இணை நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைச் சிறப்பாக எதிர்கொண்டது. ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் தனது எட்டாவது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன்களைச் சேர்த்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் மனீஷ் பாண்டேவுடன் இணைந்து கேஎல் ராகுல் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். இதனால் 44 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 247 ரன்களை எடுத்தது. அதையடுத்து 45ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் சதம் விளாசி அசத்தினார். ஐந்தாவது விக்கெட்டிற்கு இந்த இணை 94 பந்துகளில் 100 ரன்களை எடுத்துச் சிறப்பாக ஆடியது.
பின்னர் அதிரடி ஆட்டத்திற்கு மாறிய கேஎல் ராகுல் 113 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மனீஷ் பாண்டேவும் 42 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 269 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
கடைசி மூன்று ஓவர்களில் இந்திய அணி 27 ரன்களை எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி வெற்றிபெற 297 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி சார்பாக பென்னட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: யு19 உலகக் கோப்பையின் சிறந்த அணியில் இடம்பிடித்த மூன்று இந்திய வீரர்கள்!