நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்குச் சென்றடைந்தது.
இதையடுத்து அங்கு பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த வீரர்கள், அணி ஊழியர்களுக்கு கடந்த நவம்பர் 26ஆம் தேதி கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் ஆறு வீரர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், மேலும் மூன்று வீரர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் அணியைச் சேர்ந்த ஒருவரின் முடிவு சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் நியூசிலாந்தில் பயிற்சி மேற்கொள்வதற்கான தடை நீட்டிக்கப்படுவதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தேகத்தில் இருந்த ஒருவரின் பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அணியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தனிமைப்படுத்தல் காலத்தில் உள்ள பாகிஸ்தான் அணியினருக்கு மூன்று, ஆறு நாள்களில் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மனத்தில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:சாதனை நாயகன் படைத்த மற்றொரு சாதனை!