தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசனுக்கான லீக் போட்டிகள் முடிந்தன. இந்நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச் சுற்றுப்போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, கோபிநாத் உடன் தொடக்க வீரராக களமிறங்கிய கங்கா ஸ்ரீதர் ராஜூ அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இந்த ஜோடி 63 ரன்களை சேர்த்த நிலையில், கோபிநாத் 16 ரன்களுக்கு அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினாலும், கங்கா ஸ்ரீதர் ராஜூ சிறப்பாக பேட்டிங் செய்தார். 16.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 135 ரன்களை எட்டிய நிலையில், சிலம்பரசன் பந்துவீச்சில் 81 ரன்களில் கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆட்டமிழந்தார். அதில், 12 பவுண்ட்ரிகள், இரண்டு சிக்சர்கள் அடங்கும்.
இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. திண்டுக்கல் அணி தரப்பில் பிரனேஷ், ஹரி நிஷாந்த் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் நான்கு ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். கடந்தப் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சில் அசத்திய இவர், அதை இன்றைய போட்டியிலும் வெளிப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.