டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் அகிய அணிகள் மோதின. திருநெல்வேலி இந்தியா சிமெண்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய மதுரை அணி வீரர்கள் வரிசையாக பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். எனினும் அந்த அணியின் கேப்டன் சிஜித் சந்திரன் 39 ரன்களும், ஜெகதீசன் கவுசிக் 22 ரன்களும் குவித்து தங்கள் அணி மரியாதையான ஸ்கோரை எட்ட உதவினர். இறுதியில் மதுரை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை குவித்தது.
காஞ்சி பந்துவீச்சில் சிலம்பரசன் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளையும், ராஜகோபால் சதீஸ் 2, கவுதம் தாமரைக்கண்ணன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்பின்பு களமிறங்கிய காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் விசால் 6 ரன்னிலும், சித்தார்த் 14 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா அப்ரஜித், சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் அதிரடியாக ஆடத் தொடங்கினார். அந்த இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் பாபா அப்ரஜித் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய சதீஸ் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் காஞ்சி அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 141 ரன்கள் எடுத்து, மதுரை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுரேஷ் லோகேஷ்வர் 51 ரன்னுடனும், சதீஸ் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டிக்கு பின் புள்ளிப்பட்டியலில் காஞ்சி அணி இரண்டாவது இடத்திலும், மதுரை அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.