முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது ட்விட்டர் பக்கத்தில், சுஷ்மா ஸ்வராஜ் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டதும் எனக்கு சோசகமாக இருந்தது. உலகின் மூலை முடுக்கெங்கும் இருக்கும் இந்திய குடிமகன்களுக்காக பாடுபட்டவர். பெண்கள் மேம்பாட்டிற்காக பல சீரிய முயற்சிகளை எடுத்து உதரணமாக திகழ்ந்தவர் என பதிவிட்டுள்ளார்.
அதேபோல், சுஷ்மா ஸ்வராஜ் இழப்பை நினைத்து வருந்தும் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக சேவாக் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிழக்கு டெல்லி பாஜக எம்பியுமான கவுதம் கம்பிர், மூத்த அரசியல்வாதி சுஷ்மா ஸ்வராஜ் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். சமீபகாலங்களில் பயனுள்ள அரசியல்வாதியாக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது இழப்பு இந்தியாவுக்கு நேரிட்ட பேரிழப்பு என தனது ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இந்திய அணியின் கேப்டன் கோலி, சுஷ்மா ஸ்வராஜ் மறைவால் ஆழ்ந்த வருத்த்தில் இருக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதேபோல் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சுஷ்மா ஸ்வராஜின் மறைவு எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது 'பெண் சிசு' பரப்புரையில் நான் தூதராக அவருடன் சேர்ந்து பணியாற்றியது பெருமையாக இருக்கிறது. அவருடன் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட உறவை நினைத்து என்றும் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், பல்வேறு நட்சத்திர வீரர்களும் சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.