#PAKvsSL :பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் இழந்தது. தற்போது இவ்விரு அணிகளும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகின்றது.
இதில் இன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் குனத்திலக, சமரவிக்ரமா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஓஷாடா பெர்னாண்டோ அதிரடியாக விளையாடி அணியின் ரன்கணக்கை உயர்த்தினார். சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் மூன்று சிக்சர், எட்டு பவுண்டரிகள் என 78 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது. அதன் பின் சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் ஃபக்கர் சமான் தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் களமிறங்கிய பாபர் அசாம், ஹாரிஸ் ஷோஹைல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹாரிஸ் அரைசதம் கடந்தார்.

ஆனால் அந்த அணியின் மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இலங்கை அணி சார்பில் ஹசரங்கா மூன்று விக்கெட்டுகளைத் கைப்பற்றினார்.
இதன் மூலம் இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பாகிஸ்தான் அணியை பந்தாடியது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஹசரங்கா இந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிஙக: அணியிலிருந்து விலகிய நம்பர் ஒன் பேட்ஸ் வுமன் ஸ்மிருதி மந்தனா!