இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனையான மித்தாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீராங்கனையாக திகழ்ந்துவருகிறார். 1999 முதல் 2019ஆம் ஆண்டுவரை என 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிவரும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.
![Mithali Raj](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4326693_mithali.jpg)
2006ஆம் ஆண்டில் டி20 போட்டியில் அறிமுகமான இவர், இதுவரை 89 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்களை குவித்துள்ளார். அதில், இவர் 32 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், 36 வயதான மித்தாலி ராஜ் தற்போது டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2021 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கவனம் செலுத்த இருப்பதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
![Mithali Raj](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4326693_mten.jpg)
இதைத்தொடர்ந்து, #MithaliRaj என்ற ஹேஷ்டாக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் இவர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.