இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது. இது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் ஓப்பனர் குவிண்டான் டி காக் ஆரம்பத்தில் இருந்தே ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால் மறுமுனையில் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த ரீஷா ஹென்ட்ரிக்ஸ் 6 ரன்களில் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் டி காக்குடன் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் டெம்பா பாவுமாவும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்த சூழலில் கேப்டன் டி காக் அரைசதம் அடித்து அசத்தினார். அதற்கு அடுத்த ஓவரிலேயே அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரஸ்ஸி வேன் டெல் டஸ்ஸன் ஒரு ரன்னில் வெளியேறினார்.
பின்னர் சிறிது நேரம் தாக்குப்பிடித்த டெம்பா பாவுமா 49 ரன்களிலும், டேவிட் மில்லார் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 150 ரன்களை எட்டுமா என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் ஆட்டத்தின் இறுதி ஓவரில் ஆன்டில் பிலுக்குவோயோ, டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் சிக்ஸர்கள் விளாசி தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 149 ரன்கள் குவிக்க உதவினர். இந்தியா தரப்பில் தீபக் சாஹர் 2, ஜடேஜா, பாண்டியா, சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனால் இந்திய அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது இந்திய அணி ஆடிவருகிறது. மொஹாலி மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஆடிய இரண்டு டி20 போட்டியிலும் சேஸ் செய்தே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆட்டத்திலும் அதேபோல் இந்தியா வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.