இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மயங்க் அகர்வால் 215, ரோகித் சர்மா 176 ஆகியோரின் பங்களிப்பால் ஏழு விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது.

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் டீன் எல்கர் 160, டிகாக் 111, கேப்டன் டூபிளஸ்ஸிஸ் 55 ஆகியோரின் பொறுப்பான ஆட்டாத்தால் எழுச்சி கண்டது. இருப்பினும் அந்த அணி 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சில் அஸ்வின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதனால் 71 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த மயாங்க் அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் ஒரு முனையில் ரோஹித் சர்மா அதிரடியாகவும் மறுமுனையில் புஜாரா நிதானமாகவும் விளையாடினர். இதனால், ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து சாதனைப் படைத்தார்.

அவருடன் இணைந்து தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாராவும் 81 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் 149 பந்துகளில் 10 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என 127 ரன்கள் எடுத்திருந்தபோது மஹாராஜ் பந்துவீச்சில் மீண்டும் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜடேஜா - கோலி இணை அதிரடியாக விளையாடியது. ஜடேஜா 32 பந்துகளில் மூன்று சிக்சர்கள் உட்பட 40 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி 31 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 27 ரன்களுடனும் ஆட்டமிழாக்கமல் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து 395 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான டீன் எல்கர் மூன்று ரன்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜா பந்தில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் காலை முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் தியூனிஸ் டி ப்ரூயூன் 10, பவுமா 0, கேப்டன் டூபிளஸ்ஸிஸ் 13, டிகாக் 0, பிலாண்டர் 0, மஹாராஜ் 0 என வரிசையாக நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 70 ரன்களுக்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சூழலில் ஜோடி சேர்ந்த ஆல்-ரவுண்டர் சீனுராம் முத்துசாமி - டேன் பீட்டெட் ஆகியோர் அணியை தோல்வியை தவிர்ப்பதற்காக போராடிவருகின்றனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி உணவு இடைவேளை வரை 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை எடுத்திருக்கிறது. சீனுராம் 19 ரன்களுடனும், டேன் பீடெட் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், சமி 3, அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 278 ரன்கள் தேவை உள்ளது. அதே சமயத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே என்ற நிலை உள்ளது. இதனால் மதியம் நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து தோல்வியில் இருந்து மீள்வார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.