இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 14 ரன்களில் வெளியேறினார். பின்னர் அகர்வாலுடன் இணைந்த புஜாரா அரை சதமடித்த நிலையில் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கேப்டன் கோலி, மயாங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். டெஸ்ட்டில் தொடர்ந்து இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்த மயாங்க் அகர்வால் 108 ரன்னில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களைச் சேர்த்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ரபாடா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் காலை முதலே இந்திய வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார்.
பின்னர் கேப்டன் கோலியும் தன் பங்கிற்கு சதம் அடித்து அசத்தினார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 26ஆவது சதத்தை நிறைவு செய்து இந்திய அணிக்கு மேலும் வலு சேர்த்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்ஸில் 26 சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தப்படியாக நான்காவது இடத்தைப் பிடித்தார்.
குறைந்த இன்னிங்ஸில் 26 சதம் அடித்த வீரர்கள் பட்டியல்:
வீரர் | நாடு | போட்டி |
டான் பிராட்மேன் | ஆஸ்திரேலியா | 69 |
ஸ்டீவ் ஸ்மித் | ஆஸ்திரேலியா | 121 |
சச்சின் டெண்டுல்கர் | இந்தியா | 136 |
விராட் கோலி | இந்தியா | 138 |
சுனில் கவாஸ்கர் | இந்தியா | 144 |
மேத்யூ ஹைடன் | ஆஸ்திரேலியா | 145 |
இதனால் இந்திய அணி உணவு இடைவேளை வரை மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்களை குவித்திருந்தது. விராட் கோலி 104 ரன்களுடனும் ரஹானே 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.