இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸை தொடங்கியது. கடந்த போட்டியில் இரண்டு சதங்கள் விளாசிய ரோஹித் சர்மா இப்போட்டியில் 14 ரன்களில் வெளியேறினார். பின்னர் புஜாரா 58, மயாங்க் அகர்வால் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதைத் தொடர்ந்து கேப்டன் கோலி - ரஹானே ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல் ஆட்டத்தில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களைச் சேர்த்திருந்தது. மூன்று விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா வீழ்த்தினார்.
இந்நிலையில் இன்று விராட் கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். அவர்கள் இருவரும் நிதானமாக ரன்களைக் குவித்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை சோதனை செய்தனர். பின்னர் ரஹானே அரைசதமும், கேப்டன் கோலி சதமும் அடித்து மிரட்டினர். இது கோலியின் 26ஆவது டெஸ்ட் சதமாகும். ஒட்டுமொத்தமாக அவர் அடிக்கும் 69ஆவது சர்வதேச சதம் இதுவாகும்.
மேலும், கேப்டனாக விராட் கோலி 40 சர்வதேச சதங்களை (19 டெஸ்ட், 21 ஒருநள்) விளாசி அதிகமுறை சதம் அடித்த கேப்டன் என்ற சாதனைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (41 முறை) அடுத்த இடத்தில் உள்ளார். இது தவிர அதிக சதங்கல் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
கோலி - ரஹானே இணை நான்காவது விக்கெட்டிற்கு 172 ரன்களைக் குவித்திருந்தபோது ரஹானே 59 ரன்களில் மஹாராஜ் பந்துவீச்சில் டிகாக்கிடம் பிடிபட்டார். பின்னர் வந்த ஜடேஜா அமைதியாக ஆட , கோலி மறுமுனையில் பவுண்டரிகளாக அடித்து ஆடினார். அவர் 150 ரன்களைக் கடந்தபோது, கேப்டனாக அதிகமுறை 150க்கம் மேற்பட்ட ரன்களைக் குவித்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார்.
அதிகமுறை 150+ ரன்கள் எடுத்த கேப்டன்களின் பட்டியல்
வீரர் | நாடு | அதிகமுறை 150+ ரன்கள் |
விராட் கோலி | இந்தியா | 9 |
டான் பிராட்மேன் | ஆஸ்திரேலியா | 8 |
பிரய்ன் லாரா | வெஸ்ட் இண்டீஸ் | 7 |
மகிளா ஜெயவர்தனே | இலங்கை | 7 |
கிரீம் ஸ்மித் | தென் ஆப்பிரிக்கா | 7 |
இந்திய அணி தேநீர் இடைவேளைக்குப்பின் ஆட்டத்தை தொடர்ந்த கோலி, 295 பந்துகளில் தனது ஏழாவது இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இதன்மூலம் டெஸ்ட்டில் அதிக இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் அடைந்தார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகியோர் ஆறு இரட்டை சதங்கள் அடித்திருந்தனர். மேலும் இந்தப் போட்டியில் கோலி ஏழாயிரம் ரன்களுக்கு மேல் கடந்துள்ளார். கோலி இரட்டை சதம் அடித்த பின்னர், ஜடேஜாவும் இவரும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். ஜடேஜா 91 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸை இந்திய அணி டிக்ளேர் செய்தது. கேப்டன் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 254 ரன்களுடன் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.