ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை 67 ரன்களில் சுருட்டி ஆஸ்திரேலிய அணி 102 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தது இங்கிலாந்து. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க பேட்ஸ்மேனான ஹாரிஸ் 19, மூன்றாவது வீரராக களமிறங்கிய கவாஜா 23 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
52 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த ஆஸ்திரேலிய அணியை லாபுஸ்சாக்னே மீட்டெடுத்தார். இவருடன் ஹேட் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினார். 25 ரன்களுக்கு ஹேட் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வேட் தன் பங்குக்கு 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் பெயின் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 171 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், பிராட் தலா இரண்டு விக்கெட்டுகளை விழ்த்தியுள்ளனர். தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணி 283 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.