கிரிக்கெட்டில் வெள்ளை நிறப் பந்துகள் (ஒருநாள், டி20), சிகப்பு நிறப் பந்துகள் (டெஸ்ட்) என தனது மாஸ்டர் கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்திவரும் இந்திய அணியின் கேப்டன் கோலி, தற்போது பிங்க் நிறப் பந்திலும் (பகலிரவு டெஸ்ட் போட்டி) அதனை வெளிப்படுத்தியுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிராக கொல்கத்தாவில் பிங்க் பந்தில் (பகலிரவு டெஸ்ட் போட்டி) நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 136 ரன்கள் விளாசியதன் மூலம், பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் கோலி என்ற பெருமை பெற்றார். இந்திய அணி விளையாடிய முதல் பிங்க் பால் டெஸ்ட்டிலேயே கோலி இதுபோன்று பல்வேறு பெருமைகளைப் பெற்றார்.
இதையும் படிங்க: சச்சின் பாதையில் கோலி! இருவரையும் இணைத்த ஒரு சாதனை!
இருப்பினும், கோலியின் இந்த முதல் சதம் சாதனைதான் சமூகவலைதளங்களில் அதிகம் தென்பட்டுவந்த நிலையில், அவருக்கு முன்னதாகவே இந்திய கிரிக்கெட் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் பிங்க் பந்து டெஸ்ட்டில் சதம் விளாசியுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பிங்க் பால் டெஸ்ட் போட்டி வைக்க ஐசிசி 2012இல் தான் சம்மதம் தெரிவித்தது. ஆனால் அதற்கு முன் இதற்கான சோதனை போட்டி ஒன்று 2011இல் அபுதாபியில் நடத்தப்பட்டது.
இதில், எம்சிசி - நாட்டிங்ஹாம்ஷையர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில், டிராவிட் எம்.சி.சி அணிக்காக விளையாடினார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன இவர், இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்து சதம் விளாசினார். அதன்பின் 106 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிட் சமித் படெல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், இப்போட்டியில் எம்.சி.சி அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த சோதனை போட்டியில் ராகுல் டிராவிட் உடன் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஹமித் ஹசன், ஆஸ்திரேலியாவின் கிறிஸ் ரோஜர்ஸ், இங்கிலாந்தின் டேவிட் மாலன் ஆகியோர் விளையாடினர்.
இதன் மூலம், கோலிக்கு முன்னதாகவே பிங்க் பந்து டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை ராகுல் டிராவிட்டுக்கு கிடைத்துள்ளது. டிராவிட் இல்லாமல் இந்திய டெஸ்ட்டின் வரலாற்றை எழுத முடியாது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
இதையும் படிங்க: பிங்க் டெஸ்ட்டில் 'கிங் கோலி' படைத்த சாதனைகள் விவரம்!